ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது. இதையடுத்து ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தில் நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதை ‘ஹனுமன்’ பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸ் ஆவதை ஒட்டி, ‘ஜெய் ஹனுமான்’ படம் பற்றி ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார். அவர் கூறும்போது, “ ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸுக்கு முன் வேறு படங்களில் ஒப்பந்தமாக வேண்டாம் என்று நினைத்திருந்தேன். பிரசாந்த் வர்மா கதை சொன்னபோது, மறுக்க முடியவில்லை. உடனடியாக ஒப்புக் கொண்டேன். நாங்கள் ஒரு போட்டோஷூட்டையும் நடத்தினோம். அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸுக்கு பிறகு இதன் படப்பிடிப்பை இறுதி செய்து தொடங்குவோம்” என்றார். ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் இப்படம், 2027-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.