ஜான்வி கபூர் நடித்துள்ள ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பிர்தவுசுல் ஹசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவதாக திரைப்படக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “எங்கள் தொகுப்பில் சுமார் 24 படங்கள் இருந்தன. 14 பேர் கொண்ட நடுவர் குழு ஒவ்வொரு படத்தையும் ஆராய்ந்தது. ஆலோசித்து கருத்துக்களைப் பெற்ற பிறகு, இந்தப் படத்திற்கு அந்தத் திறமை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்கள். எனவே, வரவிருக்கும் ஆஸ்கார் விருதுகளில் சர்வதேசப் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். நல்ல படமாக இருந்தால், அது நிச்சயமாக பல விருதுகளைப் பெறும்.
சர்வதேச பிரிவில் நாங்கள் அனுப்பும் ஒரு படம் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, அந்தப் படத்தில் ஒரு இந்திய செய்தி இருக்க வேண்டும், அடிப்படையில் அதில் இந்தியத்தன்மை இருக்க வேண்டும். ஒரு படம் ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினால், அது அந்த நாட்டின் சுவையை, அந்த நாட்டின் செய்தியை கொண்டிருக்க வேண்டும். படத்தில் அந்த சமூகம் மதிக்கப்பட வேண்டும். நடிப்பு, எடிட்டிங், இசை, உள்ளடக்கம் மற்றும் பல அம்சங்கள் இந்தியத் தன்மையுடன் இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீரஜ் கய்வான் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஹோம்பவுண்ட்’. இதில் ஜான்வி கபூர், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா நடித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.