ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாகவுள்ளது.
2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இது விஜய் நடிப்பில் உருவாகும் கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இதனை ‘மிராய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத். பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் என்பதால், இப்படமும் பிரம்மாண்டமாக வெளியாகும் என்பது உறுதி. இப்படத்தின் வெளியீட்டால் விஜய்யின் ‘ஜனநாயகன்’-க்கு தெலுங்கு, இந்தி உள்ளிட்டவற்றில் கடும் போட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தான் அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் என்றாலும், இதர மாநிலங்களில் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவும். இதனால் வசூல் பாதிப்பு இருக்கக்கூடும் என்று தெரிகிறது. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படம் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.