விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இது விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இதைத் தவிர படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது மற்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் புஸ்ஸி ஆனந்த் நடிக்கும் ஒரு காட்சியும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் உள்ளிட்டோரும் கேமியோ செய்திருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.