இசை அமைப்பாளர் போபோ சசி, ‘பிஃபோர் ஐ ஃபேட்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதை யூகி பிரவீண் இயக்க, அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இனாரா புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் (சபேஷ்) முரளி, சத்யா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு கார்த்திக், ராப் பாடகி ஐ.கே.பெர்ரி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் (சபேஷ்) முரளி பேசும்போது, “நான் இளையராஜாவிடமும், அண்ணன் தேவாவிடமும் கீ-போர்டு பிளேயராக பணியாற்றிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டுக்குச் சென்று, அதிகாலையில் புறப்பட்டு விடுவேன். என் மகன் சசி, அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் காலை யில், என் அறையில் ஒரு கடிதம் இருந்தது.
அதில், ‘அன்புள்ள அப்பாவுக்கு, உங்கள் மகன் சசி எழுதிக் கொள்வது.. எனக்கு இசை மீது ஆர்வம் உள்ளது. நீங்கள் இசை மீது வைத்திருக்கும் பக்தியும் அன்பும் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் என் படிப்புக்காகச் செலவழிப்பதில் பாதியை, இசை கற்பதற்காகச் செலவழிக்க வேண்டும். அதற்காக இசைக் கருவியை வாங்கித் தாருங்கள். நானும் பெரிய இசையமைப்பாளராக வருவேன்’ என எழுதி இருந்தான். அதை இன்று நிரூபித்து விட்டான். அனைவரும் இசையமைப்பாளராக முடியும். ஆனால் இவனுடைய ஒலி அமைப்பு, வித்தியாசமாக இருக்கும். ஓசைகளைப் புதிதாக உருவாக்குவான். அது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார்.