வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’. அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை சின்னத்தம்பி புரொடக் ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பு செய்துள்ள இந்தப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசும்போது, “நான் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு ‘ படத்தைக் கன்னடத்தில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் இது. ‘சென்னை ஃபைல்ஸ் -முதல் பக்கம்’ என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம். இந்தப் படத்தில் ஒரு சமூக கருத்துடன் கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன். க்ரைம் த்ரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பேய் படங்களும் த்ரில்லர் படங்களும் தயாரிப்பாளர்களின் முதலீட்டுக்குப் பாதுகாப்பானவை என்பார்கள். இந்தப் படமும் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறேன்” என்றார்.