சூர்யா சாருடன் பணிபுரிய வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ்.
அந்த விழாவில் சூர்யா குறித்து லோகேஷ் கனகராஜ், “சூர்யா உடன் பணிபுரிய வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. 2006-ம் ஆண்டு கல்லூரி காலங்களில் அதிகமாக சூர்யா சாருடைய படங்களை தான் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். ’காக்க காக்க’, ’மாயாவி’, ’பிதாமகன்’ என பல படங்களைச் சொல்லலாம். சூர்யா சாருடன் கண்டிப்பாக பணிபுரிவேன். நாங்கள் இருவரும் எங்களுடைய படங்களையும் முடிக்க வேண்டும். பின் அதற்கு நேரம் வழிவகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. அக்கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படம் பண்ணவிருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். தற்போது ‘கைதி 2’, ஆமிர்கான் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு ‘ரோலக்ஸ்’ படத்தை இயக்குவார் என தெரிகிறது.