சூரி நடித்து வரும் ‘மண்டாடி’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படப்பிடிப்பு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’. இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டி என்ற பகுதியில் கடலில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. அப்போது எதிர்பாராத விதமாக கேமரா இருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 2 பேர் கடலில் மூழ்கினர். அவர்களை சுற்றியிருந்தவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
ஆனால், கேமராக்கள் கடல் நீரில் வீழ்ந்ததில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ.1 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் ரெட் டிஜிட்டல் என்ற உயர்ரக கேமராவில் படத்தை படக்குழுவினர் படமாக்கி வந்திருக்கிறார்கள். இந்த விபத்தினால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தாலும், உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்பதால் நிம்மதியடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுஹாஸ், மகிமா நம்பியார், அச்யூத் குமார், ரவீந்தா விஜய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் சூரியுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். எல்ரெட் குமார் தயாரித்து வரும் இப்படமே சூரியின் நடிப்பில் உருவாகும் அதிக பொருட்செலவு நிறைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.