மதுரை: ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்பட நடிகர் மதுரை இலைக்கடை முருகன் (மொக்கச்சாமி) உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 4) காலமானார். அவருக்கு வயது 78.
மதுரை மூன்று மாவடி பகுதியில் வசித்தவர் இலைக்கடை முருகன். இவரது தந்தை முத்தையா நாடக கம்பெனி நடத்தியவர். இவருடைய 7வது மகன் முருகன். ஏற்கெனவே நெல்பேட்டை மார்க்கெட்டில் இலை வியாபாரம் செய்த இவர், தற்போது மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இலைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த இயக்குநரும், நடிகருமான சசிகுமாருடன் பழக்கம் இருந்தது.
இவரது பேச்சு , நடிப்பை கவனித்த சசிகுமார் ‘சுப்பிரமணியபுரம்’ என்ற மதுரை பற்றிய திரைப்படத்தில் மொக்கச்சாமி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். மதுரை வழக்கில் பேசி நடித்த அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.தொடர்ந்து ‘கொம்பன்’ , ‘வேலாயுதம்’ , ‘தோரணை’ மற்றும் ‘மலையாளி’ என்ற மலையாள படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்களை ரசிக்க வைத்தார். இருப்பினும், சுப்பிரமணியபுரத்தில் அவர் பேசிய வசனம் மதுரையில் அவரை பார்க்கும்போது, சிலரை முணுமுணுக்கச் செய்தது.
இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். இன்று (ஜூன் 4) திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கிறது. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மூன்றுமாவடி தமிழ்நகர் பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் முருகனுக்கு 5 மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த நடிகர் முருகனுக்கு திரையுலகினர், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.