சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படமென்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் சிவா. இப்படத்தினை சிவா அடுத்து இயக்கவிருப்பதாகவும், அதற்காக திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது இறுதி திரைக்கதை வடிவத்தினை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன், இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை. ‘அண்ணாத்த’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய படங்களின் தோல்வியினால் சிவா தனது அடுத்த படத்துக்கு பெரும் நேரத்தினை எடுத்து உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
‘கங்குவா’ படத்துக்குப் பிறகு அஜித் படத்தினை இயக்கவிருந்தார் சிவா. ஆனால், அப்படத்தின் தோல்வியினால் அஜித் – சிவா கூட்டணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித் – சிவா கூட்டணி இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.