‘சிவாஜி’ படத்தில் நடிக்காமல் போனது ஏன் என்பதற்கான காரணத்தை நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘சிவாஜி’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம், 2007-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வெளியானது. இதில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை தான் அணுகினார்கள். அவரோ நடிக்க முடியாது என்று விலகிவிட்டார். அந்தச் சமயத்தில் இணையத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த சத்யராஜ் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.
தற்போது ‘கூலி’ படத்துக்காக அளித்த பேட்டியில், ‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், “‘சிவாஜி’ படத்தில் நடிக்க கேட்ட சமயத்தில், எனது மார்க்கெட் சரிந்துக் கொண்டிருந்தது. அப்போது ஏதாவது ஒரு புதிய படம் நம்மை தூக்கி நிறுத்திடாதா என்ற எண்ணத்தில் இருந்தேன். நாயகனாக எப்படியாவது நிலைநிறுத்த வேண்டிய சூழலில் இருந்தேன். அப்போது தான் ஷங்கர் சார் ‘சிவாஜி’ படத்தில் நடிக்க என்னை அணுகினார்.
அவரிடமே “சார் என் நிலைமை ரொம்ப மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. நாயகனாக ஏதாவது ஒரு படம் ஹிட்டடித்துவிடாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் வில்லனாக நடித்தால் மொத்தமாக போய்விடும் சார்” என்று கூறினேன். இது தான் உண்மையான காரணம். ஆனால், பல்வேறு விஷயங்கள் இணையத்தில் எழுதினார்கள்” என்று தெரிவித்துள்ளார் சத்யராஜ்.