சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும் என்று தனது படம் குறித்து தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.
வெங்கட்பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான கதை மற்றும் திரைக்கதையை இறுதிச் செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அப்பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், சிவகார்த்திகேயனுக்கு கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
தனியார் விருது விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு வெங்கட்பிரபு, “சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும். கதை ரொம்ப நன்றாக வந்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் இருவரிடமும் கதையினை கூறிவிட்டேன். இருவருக்குமே கதை ரொம்பவே பிடித்துவிட்டது.
கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் வித்தியாசமாகவே ட்ரை பண்ணியிருக்கிறேன். அனைவரும் ரசிக்கக் கூடிய சந்தோஷமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சின் மூலம் விரைவில் சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்திலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.