சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை முடித்துவிட்டு ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இது குறித்து விசாரித்த போது, இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்டது படக்குழு. இதனை படித்துவிட்டு சிவகார்த்திகேயனும் ஓகே செய்துவிட்டார். இதனால் முழுவீச்சில் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.
மேலும், இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவர் சம்மதம் தெரிவித்தாலும், தேதிகள் எப்போது வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் அனைத்து நடிகர்களின் தேதிகளின் அடிப்படையில் மீண்டும் மோகன்லாலிடம் தேதிகள் குறித்து பேசவுள்ளது படக்குழு. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறார்கள் திரையுலகில்.