விக்ரம் பிரபு மற்றும் அக்ஷய் நடித்துள்ள ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு, அக்ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
முழுமையாக படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, நாயகியாக அனந்தா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
இதன் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, வேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.