துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகர் ஃபதேஹி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கேடி: தி டெவில்ஸ்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பிரேம் இயக்கியுள்ளார்.
1970-களில் நடந்த கதையைக் கொண்ட இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் சஞ்சய் தத் பேசும்போது, “இதில் இயக்குநர் என்ன செய்ய சொன்னாரோ அதைச் செய்திருக்கிறேன். இது அட்டகாசமான மாஸ் ஆக்ஷன் படம். துருவா சர்ஜா நன்றாக நடித்திருக்கிறார்.
தமிழில் எனக்கு ரஜினி, கமல்ஹாசன் மீது அதிக மரியாதை உண்டு. சீனியர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். ரஜினி சாருடன் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் அமைதியானவர். விஜய்-யுடன் நடிப்பதையும் விரும்புகிறேன்.
ஆனால், எனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது கோபம் இருக்கிறது. ‘லியோ’ படத்தில் எனக்கு அவர் சிறிய கதாபாத்திரத்தைக் கொடுத்துவிட்டார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர், ‘‘அஜித்குமாரையும் எனக்குப் பிடிக்கும். அவரும் நெருங்கிய நண்பர்தான்” என்றார்.