சிம்பு படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்பதை பேட்டியொன்றில் வெற்றிமாறன் விவரித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால், எதுவுமே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சிம்பு நடிக்கவுள்ள படத்துக்காக ப்ரோமோ வீடியோ எல்லாம் படமாக்கப்பட்டு அறிவிக்கப்படாமல் உள்ளது. சிம்பு – வெற்றிமாறன் இணையும் படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார்.
சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து பேட்டியொன்றில் வெற்றிமாறன், “’வடசென்னை’ படம் தொடங்கப்பட்ட போது, முதலில் சிம்பு நடிப்பதாக தான் இருந்தது. பின்பு சில காரணங்களால் நடைபெறவில்லை. அக்கதையில் தனுஷ் நடிக்க உள்ளே வந்தவுடன், அதனை அவருக்கு ஏற்றவகையில் மாற்றினேன். இப்போது சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை என்னவென்றால் முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதை தான்.
ஒரே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் நடிப்பது மாதிரி இருக்கும். ’வடசென்னை’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் இப்படத்தில் இருப்பார்கள். ’அன்பு’வாக நடித்த தனுஷ் மட்டும் இப்படத்தில் இருக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘வடசென்னை’ கதை காலகட்டத்தில் வேறொரு பக்கத்தில் நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என்பது உறுதியாகிறது. இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இப்போதைக்கு புரியாத புதிராக இருக்கிறது.