சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றதை அடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜூலை 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளோடு இரண்டு துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள் பதவிக்கும், 14 கமிட்டி உறுப்பினர்கள் பொறுப்புக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தின் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தேர்தல் அதிகாரியாக ‘பெப்சி’யின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு செயல்பட்டார். மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின.
இதில், ‘பொம்மலாட்டம்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கும் பரத், தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் மற்றும் தினேஷ் ஆகியோர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். 491 வாக்குகள் பெற்று பரத், தலைவராகத் தேர்வானார். துணைத் தலைவர்களாக ஆதித்யா, ராஜ்காந்த் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கான தேர்தலில் நடிகர் நவீந்தர் வெற்றி பெற்றார். பொருளாளராக கற்பகவள்ளி, இணைச் செயலாளர்களாக, நடிகைகள் சிவ கவிதா, நீபா, நடிகர்கள் ஈஸ்வர் ரகுநாத், குறிஞ்சிநாதன் ஆகியோர் தேர்வாகினர்.