நடிகர் அஜித்குமார், சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். என் சுய முயற்சியால் மட்டுமே நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன். மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்.
ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதைப் பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஆனால், என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை. மோட்டார் ரேஸிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் . உங்கள் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.
என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா, ஆத்விக் இருவரும் என் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள்.
நான் பல நேரங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசாமலும் இருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்கத் தவறியது இல்லை. என் நிறை குறைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்துக் கொண்டாடியதற்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். இவ்வாறு அஜித்குமார் தெரிவித்துள்ளார்.