கமல் ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கே.சி.ரவிதேவன் இயக்கும் படம், ‘சிங்கா’. அம்ரீஷ் இசையமைக்கிறார். கண்ணன் செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் சிங்கம் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்கிறது. இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் கே.சி.ரவி தேவன் கூறும்போது, “சவாலான இப்படத்தை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, நிஜ சிங்கத்துடன் நடிக்கத் தயங்கினர்.
ஆனால், ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்தார். எதிர்மறை பெண் கதாபாத்திரம், 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதில் லீஷா எக்லேர்ஸ் நடித்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மொழிகளைக் கடந்த கதை இது என்பதால், பான்-இந்தியா படமாக எடுத்து வருகிறோம்” என்றார்.