‘சிக்கந்தர்’ தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக விவரித்து இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. இப்படம் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் பெரும் தோல்வியை தழுவிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மதராஸி’ படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘மதராஸி’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ‘சிக்கந்தர்’ தோல்வி குறித்து பேசியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில், “படப்பிடிப்பு தளத்தில் மாற்றங்கள் இருப்பது ஒரு கட்டத்தில் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் கதையில் இருந்து கனெக்ட் ஆகாமல் போய்விடுவோம். இதே மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது. அனைத்தையும் வெளியே சொல்ல முடியாது.
கதையில் மெருக்கேற்றுவது என்பது வேறு. ஆனால் கதையில் மாற்றங்கள், முழுக்க இரவு நேரம் மட்டுமே படப்பிடிப்பு, காலையில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் அரங்குகளுக்குள் விளக்குகளை வைத்து படமாக்க வேண்டும். சல்மான்கானை வைத்து பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாது. ஏனென்றால் அவருடைய உயிருக்கும் ஆபத்து இருந்தது.
அனைத்துமே கிராபிக்ஸ், காட்சிகள் எல்லாமே க்ரீன் மேட், படப்பிடிப்பு வருவதும் தாமதம்தான்… இப்படி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் கதையாக எனக்கு பிடித்த கதை ‘சிக்கந்தர்’” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.