‘சிக்கந்தர்’ படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணமல்ல என்று பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. சமீபத்திய பெரிய நடிகர்களின் இந்திப் படங்களில் பெரும் தோல்வியை தழுவிய படம் ‘சிக்கந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில் “‘சிக்கந்தர்’ படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு ராஜா தனது மனைவியை பற்றி அவர் வாழும்போது புரிந்துகொள்ளவில்லை. நாம் அனைவருமே அப்படித்தான், இவர்கள் நம் கூடவே இருப்பார்கள் என்று நினைத்து அந்த உறவுக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. திடீரென்று மறையும்போது தான், இன்னும் கொஞ்சம் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கலாமே என்று தோன்றும்.
அப்படி ஒருநாள் மனைவி இறக்கும்போது, அவளது உறுப்புகள் 3 பேருக்கு தானம் செய்யப்படுகிறது. அவன் மனைவிக்கு செய்ய வேண்டியதை, அந்த உறுப்பைகளைப் பெற்றவர்களுக்கு பண்ண வேண்டும் என நினைக்கிறான். அப்போது அவனுக்கு ஒரு ஊரே நட்பாகிறது. இதெல்லாம் வைத்துதான் அக்கதையினை எழுதினேன். ஆனால், என்னால் சரியாக செயல்படுத்த முடியவில்லை. அதன் தோல்விக்கு நான் மட்டுமே காரணமல்ல” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.