அனுமோள், லிங்கேஷ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘காயல்’. எழுத்தாளர் தமயந்தி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் கௌன்யா இசை அமைத்துள்ளார். ஜெ ஸ்டூடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் தமயந்தி பேசும்போது, “எனக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எழுத்தின் மூலமாக இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். சாதி நெருக்கடிக்குள் நான் வளர்ந்திருக்கிறேன். பெரும்பாலான சினிமாவில் ஆண்கள் மீசையை முறுக்கிக் கொண்டு அரிவாளுடன் வந்து ‘போட்டுத் தள்ளிவிடுவேன்’ என்று சொல்வதைப் பார்த்திருப்பீர்கள்.
உண்மை அதுவல்ல. அதன் பின் பெண்களும் இருக்கிறார்கள். சாதி வன்முறை அவர்களிடம் அதிகம் இருக்கிறது. குடும்ப அமைப்புக்குள் சாதி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். காலங்காலமாக அதை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்வதிலும் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான், இந்த திரைப்படம். இதில் உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.