சிவராஜ்குமார் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டதை ஆவணப்படமாக உருவாக்க இருக்கிறார்கள்.
ஜூலை 12-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்கள், நடிக்கவுள்ள படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ‘சர்வைவர்’ ஆவணப்படத்தின் அறிவிப்பு தான். சமீபத்தில் புற்றுநோயால் சிவராஜ்குமார் பாதிக்கப்பட்டார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள். அமெரிக்காவுக்கு சென்று முழுமையாக குணமாகி அவர் நாடு திரும்பினார். இதற்கு பின்பு அளித்த பேட்டிகளில், தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
தற்போது புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்ததை ஒரு ஆவணப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். இதனை சிவராஜ்குமாரின் மனைவி கீதா தயாரிக்கவுள்ளார். இதில் அவர் புற்றுநோய் பாதிப்பில் தொடங்கி, மருத்துவம், அமெரிக்காவில் நடந்தது என்ன என்பது உள்ளிட்ட அனைத்துமே இடம்பெறவுள்ளது. இந்த ஆவணப் படத்தினை பிரதீப் சாஸ்திரி இயக்கவுள்ளார்.