நடிகை அனுஷ்காவைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘ஆக்ஷன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைஃப்’, ‘மாமன்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் “இந்த துறையில் செயல்பட சமூக ஊடகங்கள் அவசியம் என நினைத்திருந்தேன். பணிபுரியும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். ஆனால், அதை விட்டுவிட்டு, வெற்றிகரமாக என் வேலைகளில் இருந்து என்னை திசைத் திருப்பி, என்னைக் கட்டுப்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சின்ன இன்பத்தைக் கூட மகிழ்ச்சியற்றதாக மாற்றியிருக்கிறது.
நான் பொதுவானவளாக ‘சூப்பர்நெட்’டின் விருப்பங்களுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப வாழ்வதற்கு விரும்பவில்லை. அதனால், எனக்குள் இருக்கும் கலைஞரையும், என்னுள் இருக்கும் சிறுமியையும் தனது அப்பாவித்தனத்துடனும் அசல் தன்மையுடனும் வைத்திருக்க, இணையத்தில் இருந்து முற்றிலும் விலகி சரியானதைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.
இதன் மூலம், என் வாழ்க்கையில் இன்னும் அர்த்தமுள்ள உறவுகளையும் படங்களையும் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நான் நல்ல படங்களில் நடித்தால் முன்பு போல அன்பைப் பொழிய மறக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா ஷெட்டி, இரு தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது ஐஸ்வர்யா லட்சுமியும் அறிவித்துள்ளார்.