தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் பேசும்போது, “எனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது கோபம் இருக்கிறது. ‘லியோ’ படத்தில் எனக்கு அவர் சிறிய கதாபாத்திரத்தைக் கொடுத்துவிட்டார்” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
இந்த வீடியோ பதிவை மட்டும் தனியாக கட் செய்து, லோகேஷ் கனகராஜ் மீது சஞ்சய் தத் கோபம் என்று இணையத்தில் பரப்பினார்கள். இந்த வீடியோ பதிவு வைரலானது. தற்போது இது தொடர்பாக பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சஞ்சய் தத் குறிப்பிட்டது தொடர்பாக, “அதை பேசிய பின்பு தொலைபேசியில் அழைத்து பேசினார். ஜாலியாக பேசிய விஷயங்களை, அதை மட்டும் எடிட் செய்து போடுகிறார்கள் என்று சஞ்சய் தத் சார் ஆதங்கப்பட்டார். நானோ ஒன்றும் பிரச்சினையில்லை சார் என்று கூறினேன். நான் ஒன்றும் ஜீனியஸ் இயக்குநர் அல்ல. அனைத்துமே கற்றுக்கொண்டது தான். வரும்காலத்தில் அவரை வைத்து சிறப்பான படம் ஒன்றை இயக்குவேன்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.