சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘ஃப்ரீடம்’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள், பத்திரிகையாளர் காட்சி என அனைத்தும் முடிந்துவிட்டன. ஆனால், திட்டமிட்டப்படி படம் வெளியாகவில்லை. மாலையில் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என்று திட்டமிடப்பட்டது. இன்றும் இப்படம் வெளியாகவில்லை. எப்போது வெளியீடு என்று குறிப்பிடாமல், ‘ஃப்ரீடம்’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மு. ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஃப்ரீடம்’. தமிழகத்தில் இலங்கை அகதிகள் மத்தியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. சசிகுமார் நடிப்பில் ‘டூரிஸ்ட் பேமிலி’ பெரும் வெற்றிக்குப் பிறகு இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
’ஃப்ரீடம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக உதயகுமார், எடிட்டராக ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.