வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி முயற்சிக்கு காரணமானவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது.
தற்போது சிம்பு – வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சம்பளப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத காரணத்தினால் இப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கிட்டபோது, உரிமைகள் விற்பனையின் மூலம் லாபம் ஈட்ட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதனை கணக்கில் கொண்டே தாணு படத்தை கைவிட்டுவிட்டதாக தெரிகிறது.
சிம்பு படம் இல்லை என்று ஆகிவிட்டதால், தற்போது ‘வாடிவாசல்’ கதையை முழுமையாக முடிக்க பணிகளை மேற்கொண்டு வருகிறார் வெற்றிமாறன். சிம்பு படத்துக்கான ப்ரோமோ பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வந்தது. ஆனால், சம்பளப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டாமல், சிம்பு – வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாக தெரிகிறது.