புதுச்சேரி: தமிழகத்தைப் போல் கேளிக்கை வரியை குறைக்க புதுச்சேரி அரசு மறுத்துள்ள சூழலில் 15 திரையரங்குகளிலும் ‘கூலி’ திரைப்படம் வெளியாகிறது.
புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ரங்கசாமியை அண்மையில் சந்தித்தனர். அப்போது, நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டத்தின்படி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இதேபோல் திரைப்பட டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போது வரை அமலில் இருக்கிறது.
புதுச்சேரியில் நகரம், கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் செயல்பட்டு வரும் நிலையில், ரூ.100-க்கும் குறைவான திரைப்பட டிக்கெட்டு க்கு 12 சதவீதமும், ரூ.100-க்கு மேல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதோடு உள்ளாட்சித்துறையின் கேளிக்கை வரியாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. டிக்கெட் விற்பனையில் 45 சதவீத வரியை அரசுக்கு நேரடியாக செலுத்தி வருகிறோம். அண்டை மாநிலமான தமிழகத்துடன் ஒப்பிடும்போது, தமிழ் படங்களுக்கான கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வரி விதிப்பு முறை இரண்டு மடங்காக இருப்பதால், திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் நிலை நீடிக்கிறது. ‘கூலி’ உள்ளிட்ட புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கூலி படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள், புதுச்சேரியில் படத்தை வெளியிட தயங்குகின்றனர். எனவே புதுச்சேரியில் உள்ளாட்சி வரியை குறைக்க வேண்டும்” என்று சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்று முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளிடம் பேசியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கேளிக்கை வரி மூலம் ரூ.5 கோடி வரை வருவாய் வருவதால் இவ்வரியை குறைக்க அரசு தரப்பு மறுத்துள்ளது. முதல்வரை இருமுறை சந்தித்து பேசியும் வரியை குறைக்க புதுவை அரசு மறுத்துள்ளது. இதனால் ‘கூலி’ திரைப்படம் வரும் 14ம் தேதி 15 திரையரங்குகளில் மட்டுமே புதுச்சேரியில் வெளியாகிறது. இதனிடையே, இன்று காலை முதல் ”கூலி” படத்தின் ஆன்லைன் புக்கிங் புதுச்சேரியில் தொடங்கியது.