விஜயகாந்த் நடிப்பில் அவருடைய 100-வது படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி இயக்கி, 1991-ல் வெளியான இந்தப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ஆக. 22-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இதை வெளியிடுகிறார். இதன் புதிய டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “என்னை நம்பி என் அப்பா, அம்மாவே பணம் கொடுக்க யோசித்த நேரத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு, என்னை நம்பி எடுத்த படம் இது. அன்று ஈழத் தமிழர்களுக்காக, தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த். அப்போதுதான் இந்த படத்துக்கு ‘பிரபாகரன்’ என பெயர் வைக்க முடிவு செய்தோம். பின் ‘தளபதி பிரபாகரன்’ வைக்கலாம் என்று சொன்னேன். பிறகு திடீரென ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.
இதில் ரம்யா கிருஷ்ணனுக்குப் பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலைக் கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகளும் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாகக் கூட இருக்கட்டும் என்று நினைத்துத் தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார். ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலைப் பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது.
இதில் சரத்குமார் நடித்தபோது அவருக்குக் கழுத்தில் அடிபட்டுவிட்டது. அதனால் அவரை மாற்றி விடலாமா? என்று நினைத்தபோது, விஜயகாந்த் மறுத்து விட்டார். ‘அவர் வளர்ந்து வரக்கூடிய நடிகர், அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும், அவர் திரும்பி வந்த பிறகு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்’ என பெருந்தன்மையாகக் கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளிப் போனதால் தான் அவருடைய 100-வது படமான பெருமையை பெற்றது.
விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், அவரை பொருத்தவரை அரசியலில் நடிக்கத் தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அவருக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்துக்கு சேர வேண்டிய புண்ணியங்களைத் தனது வாரிசுகளுக்காகச் சேர்த்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.