லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.
சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).
தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை.
படம் முழுக்க ரஜினி, சவுபின் இருவருடைய ஆதிக்கம்தான். தனது அட்டகாசமான திரை ஆளுமையால் ரஜினிகாந்த், நட்சத்திர நெரிசல் மிகுந்த படத்தில் வழக்கம் போல ஜொலிக்கிறார். ரஜினியின் சின்னச் சின்ன மேனரிசங்கள் கூட ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ‘ரஜினி ஸ்பெஷல்’ தருணங்கள் படத்தின் நகர்வுக்கு வலுவூட்டுகின்றன.
சவுபினுக்கு முழுநீள நெகட்டிவ் கதாபாத்திரம். படம் முழுக்க தனது குரூரத் தன்மை கொண்ட கதாபாத்திரத்துக்கு சிறப்பான முறையில் நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் உபேந்திரா வரும் இடங்கள் மாஸ். ஆமீர்கான் கதாபத்திரம் ரோலக்ஸின் இன்னொரு வடிவம். சிறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.
லோகேஷின் படங்களில் தொடக்கம் முதல் வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென ஆக்ரோஷம் கொண்டு எழுந்து நிற்கும். உதாரணமாக ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம். அப்படி இதிலும் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. இணையத்தில் பெரும் வைரலான ‘மோனிகா’ பாடல் பொருந்தாத இடத்தில் வருகிறது. ஆனால் அதில் பூஜா ஹெக்டேவின் நடனம் சிறப்பு.
அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.
80களின் ரஜினியை ரசித்தவர்களுக்கு படத்தில் சிறப்பான ட்ரீட் உள்ளது. நேர்த்தியான முறையில் டீ-ஏஜிங் செய்த தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். லோகேஷ் படங்களில் டிரேட்மார்க் ஆக வரும் பழைய பாடல் இதில் சுத்தமாக எடுபடவில்லை.
படத்தின் முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், படத்தின் நீளம் காரணமாக கிட்டத்தட்ட அந்தக் காட்சி வரும்போதே பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுகின்றனர்.
மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், அது சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘ஆவரேஜ்’ ஆன படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.