‘கூலி’ வசூல் குறித்து போலி தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று படத்தின் வெளிநாட்டு உரிமையைப் பெற்றுள்ள ஹம்சினி நிறுவனம் எச்சரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தினை விமர்சகர்கள் கடுமையாக சாடினார்கள். ஆகையால் இதன் வசூல் தொடர்ச்சியாக இறங்குமுகமாக அமைந்தது. இதனால் இப்படம் பல்வேறு விநியோகஸ்தர்களுக்கு தோல்வியில் முடியும் என்று தகவல் வெளியானது.
இதனிடையே ‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமையினைக் கைப்பற்றிய ஹம்சினி நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் “‘கூலி’ படத்தின் உலகளாவிய வசூல் தொடர்பாக வெறுப்புணர்வுடன் சில குழுக்களும், அதிகாரபூர்வமற்ற பக்கங்களும் போலியான வசூல் நிலவரங்களை பரப்பி வருகிறார்கள். இந்த தவறான வசூல் நிலவரங்கள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
தயாரிப்பாளரும், ஹம்சினி நிறுவனமும் மட்டுமே அதிகாரபூர்வமான வசூல் நிலவரங்களை வெளியிடுவோம். இணையத்தில் பரவி வரும் பிற வசூல் நிலவரங்கள் நம்பகமற்றவை. அவற்றை உண்மையானவை என ஏற்க முடியாது. இந்த போலியான வசூல் நிலவரங்கள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடுகளை பரப்புவது தவறானது மட்டுமன்றி, படத்தின் நற்பெயருக்கும், நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இத்தகைய செயற்பாடுகளை எங்களுடைய குழு தொடர்ந்து கவனித்து வருகிறது. எதையும் தவறாக அல்லது நோக்கத்தோடு பரப்பும் எந்தவொரு முயற்சியும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகும். இதில் நஷ்டஈடு கோருதல்களும் அடங்கும். அனைத்து தகவல்களும் உறுதிப் படுத்தப்பட்ட அதிகாரபூர்வ மற்றும் நம்பகமான தகவல்களை பயன்படுத்தும்படி, எங்களை சார்ந்த அனைவரும் மன்றாடுகிறோம். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றியைக் குறிக்கும். தவறான பிரச்சாரங்கள் அதை மங்கச் செய்ய முடியாது.
சினிமா என்பது சிலரின் சுயநலத்திற்கான கருவி அல்ல. அது அனைவருக்குமானது. நேர்மையுடனும் நியாயத்துடனும் திரைப்படங்களைக் கொண்டாடுவோம்” என்று ஹம்சினி நிறுவனம் தெரிவித்துள்ளது.