’கூலி’ படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால், பார்வையாளர்கள் குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என முன்னணி திரையரங்குகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் இதன் தணிக்கைக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. இதனால் பலரும் ஆச்சரியப்பட்டாலும், படக்குழுவினரோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஏ சான்றிதழ் என்பதால் திரையரங்குகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பி.வி.ஆர் மற்றும் ஏஜிஎஸ் திரையரங்குகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பதிவில் “ஏ சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். ஏ சான்றிதழ் படங்களுக்கு செல்லும் பொழுது வயதை நிரூபிக்கும் சான்றிதழ் அவசியம்” என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் வசூல் ரீதியாக பாதிப்பு இருக்குமா என்பது விரைவில் தெரியவரும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.