ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன.
ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். ஆக.14-ல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ரஜினிகாந்தின் படமாக கூலி அறியப்படுகிறது.
கூலிக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற 5 திரைப்படங்கள்:
சிவா (1989) – ரஜினிகாந்த், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த படம் சிவா. ஆக்ஷன் டிராமாவாக வெளியாகி இருந்தது. இந்தப் படம் இந்தி படத்தின் ரீமேக்.
நான் சிகப்பு மனிதன் (1985) – எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இதில் ‘விஜய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். கல்லூரி பேராசிரியர் ஒருவர் ராபின்ஹுட்டாக மாறி சமூக விரோதிகளை வீழ்த்துவது தான் கதை. இது இந்தி படத்தின் ரீமேக்.
நான் மகான் அல்ல (1984) – எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் நான் மகான் அல்ல. இதில் விஸ்வநாத் என்ற பெயரில் வழக்கறிஞராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். பழிவாங்கும் படலம் இந்தப் படத்தின் கதை.
புதுக்கவிதை (1982) – இது கன்னட படத்தின் ரீமேக். ரொமான்டிக் டிராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ‘வெள்ளை புறா ஒன்று’ பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசை அமைத்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் படத்தை இயக்கி இருந்தார்.
நெற்றிக்கண் (1981) – ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் தந்தை, மகனாக நடித்த படம் இது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், விசு வசனம் எழுத, கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுதி இருந்தார். தந்தை மற்றும் மகனுக்கு இடையில் நடக்கும் மோதல் தான் படத்தின் கதை.