லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
‘கூலி’ படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்காக பிரத்யேக வீடியோ பதிவு ஒன்றைக் கொடுத்திருந்தார் ரஜினி.
இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசும்போது, “லோகேஷ் கனகராஜ் இயக்கியதில் ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்கள் ரொம்பவே பிடிக்கும். ‘கூலி’ கதையைக் கேட்டதும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அக்கதையை கேட்டு முடித்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி, ரஜினி இந்தக் கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாரா என்பதுதான். ஏனென்றால் எனது கதாபாத்திரம் ரஜினிக்கு சமமானதாகவும், வலிமையானதாகவும் இருந்தது. அந்தக் கதையில் கிட்டதட்ட நாயகன் மாதிரி எனது கதாபாத்திரம் இருந்தது. ஏனென்றால் லோகேஷ் கனகாராஜ் வில்லனை நாயகனுக்கு சமமாக காட்டியிருக்கிறார்.
‘கைதி’ படம் பார்த்ததில் இருந்து லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்ற விரும்பினேன். இப்போது லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன். சன் பிக்சர்ஸ் கொடுத்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி மீதமுள்ள வகையில் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார் லோகேஷ். அதேபோல் இப்படத்தில் சவுபின் சாகீர் கதாபாத்திரம் அனைவருடைய மனதையும் கவரும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் ஒரு கப்பலில் 15 நாட்கள் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பு மிகவும் சவாலானது. அது முடிந்தவுடன் ரஜினி படப்பிடிப்பில் உள்ள 350 உறுப்பினர்களுக்கும் பணம் கொடுத்து அவர்களுடைய குடும்பத்துக்கு ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொன்னார்.” என்று பேசியுள்ளார் நாகார்ஜுனா.