‘கூலி’ படத்தின் தனது கதாபாத்திர பின்னணி குறித்து விவரித்து இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். முதன்முறையாக அப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், உடன் நடித்த நடிகர்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “ரஜினி சார் எப்போதுமே ரொம்ப கூலாக இருப்பார். அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டுவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சவுகரியமாக மாற்றும் வழி அவரிடம் இருக்கிறது.
‘கூலி’ படத்தில் சத்யராஜ் சாருடைய மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க ஆண்களை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுவார்கள். அப்படியான ஒரு கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. இதில் நாகார்ஜுனா சார் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பே அருமையாக இருக்கும். எப்போதுமே அவருக்கு ரசிகையாக இருந்துள்ளேன். இப்போது அவரது சூப்பர் ரசிகையாக மாறியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.