’கூலி’ படத்தின் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாக பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகத்தினரிடம் நேரடியாக பேசியிருக்கிறார் ஆமிர்கான்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆமிர்கான். இந்தி தவிர்த்து இதர மொழிகளில் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாக ‘கூலி’ படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்து முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியில் ‘வார் 2’ வெளியாவதால் அப்படத்துக்கே முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.
தற்போது ‘கூலி’ படத்துக்காக தாமாக முன்வந்து பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகத்தினரிடம் பேசியிருக்கிறார் ஆமிர்கான். இதன் மூலம் இரண்டு படங்களுக்கும் சரி சமமாக திரையரங்குகள் பிரிக்கப்படும் என தெரிகிறது. ஆமிர்கானின் இந்த செயலால் வர்த்தக நிபுணர்கள் பலரும் ஆச்சரியத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஏனென்றால், ‘கூலி’ படத்தில் நடித்ததற்காக ஆமிர்கான் சம்பளம் வாங்கவில்லை. ஆனால், படத்துக்கு திரையரங்குகள் கிடைக்க அவரே களமிறங்கியிருப்பது இந்தி திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனால் இந்தியிலும் ‘கூலி’ படத்துக்கு கணிசமான திரையரங்குகள் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி மும்பையில் ‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.