தமிழ் சினிமாவின் இசைச் சூழலை பொறுத்தவரை எல்லா காலத்திலும் நடிகர்களுக்கு இருப்பது போலவே இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பது வழக்கம். எனினும், அப்படியான எந்த வகைமைக்குள்ளும் அகப்படாமல் எல்லா தரப்பு ரசிகர்களாலும் சிலாகிக்கப்படும் இசையை கொடுக்கும் இசையமைப்பாளர்கள் ஒருசிலரே. அப்படி ‘ஹேட்டர்’களின் வன்ம விமர்சனங்களுக்கு ஆளாகாமல் அனைவரும் ரசிக்கும்படியான இசையை தொடர்ந்து கொடுத்து வருபவர்களில் ஜி.வி.பிரகாஷ் முக்கியமானவர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சகோதரி மகனான சிறுவன் ஜி.வி.பிரகாஷை ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலின் ஆரம்ப வரிகளை பாடவைத்திருப்பார். அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட்டடித்ததை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரது குரலுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ‘உழவன்’, ‘பம்பாய்’,’ ‘இந்திரா’ உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற முக்கிய பாடல்களில் ஜி.வி.பிரகாஷின் குரலும் இடம்பிடித்தது.
இதன் பிறகு இசையை கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியவர் 2005-ல் ஹாரிஸ் இசையில் ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் யானை’ பாடலின் மூலம் மீண்டும் கவனம்பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு ஜி.வி.பிரகாஷுக்கு தனது ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக வாய்ப்பு தந்தார் வசந்தபாலன். தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை திறம்பட பயன்படுத்தியிருந்தார் ஜி.வி. அதில் இடம்பெற்ற ‘உருகுதே’, ‘வெயிலோடு விளையாடி’ உள்ளிட்ட பாடல்கள் கிராமம் முதல் நகரம் வரை ஹிட் ஆகின.
இப்படத்தின் வெற்றியால் தமிழ் இயக்குநர்கள் தேடும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார் ஜி.வி.பிரகாஷ். முதல் படத்தில் ஹிட் பாடல்களை கொடுத்து பின்னர் காணாமல் போய்விடாமல், அடுத்தடுத்து தன்னை தேடி வந்த வாய்ப்புகளை தன் சிறப்பான இசையால் தக்கவைத்தார். குறிப்பாக ‘கிரீடம்’, ‘பொல்லாதவன்’, ‘காளை’, ‘ஆனந்த தாண்டவம்’, ‘அங்காடி தெரு’ என தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை தேடிப் பிடித்துக் கொண்டார் ஜி.வி.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டினம்’ படத்தின் பாடல்கள் பெற்ற வரவேற்பு ஜி.வி.பிரகாஷை மேலும் உயரம் செல்ல உதவியது. வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்று தந்தது.
அதுவரை யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி வைத்து வந்த செல்வராகவன் முதல்முறையாக ‘ஆயிரத்தின் ஒருவன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி வைத்தார். இது செல்வராகவன் ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது. யுவன் இல்லாமல் செல்வா படமா? என்ற கேட்டவர்களை தனது அபார இசையின் மூலம் வாயடைக்கச் செய்தார் ஜி.வி.பிரகாஷ். இதன் மூலம் செல்வராகவனின் அடுத்த படமான ‘மயக்கம் என்ன?’ படத்தின் வாய்ப்பும் அவருக்கே வந்தது. இன்றளவும் கொண்டாடப்படும் அட்டகாசமான பாடல்களையும், பின்னணி இசையையும் அப்படத்துக்கு கொடுத்திருந்தார்.
‘தெய்வத் திருமகள்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தந்தையும் மகளும் பேசிக் கொள்ளும் முக்கிய தருணத்தில் தனது பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தார் ஜி.வி.பிரகாஷ். அட்லீயின் முதல் படமான ‘ராஜா ராணி’யின் தீம் இசை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்துக்குப் பிறகு நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தாலும் தொடர்ந்து இசையமைப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். அதற்கு உதாரணம்தான் ’அசுரன்’, ‘சூரரைப் போற்று’, ‘தங்கலான்’, ’அமரன்’ உள்ளிட்ட படங்கள். இதில் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ‘வாத்தி’ படத்துக்காக மீண்டும் இரண்டாவது முறையாக அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைத் துறையில் தனது வியத்தகு இசைத் திறமையாலும், அசத்தலான அணுகுமுறையாலும் எப்போதுமே தனித்து நிற்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம். இந்திய அளவில் பாலிவுட் சினிமாவின் முகத்தை மாற்றிய படங்களில் அனுராக் காஷ்யபின் ‘கேங்ஸ் ஆஃப் வாசப்பூர்’ (Gangs of Wasseypur) இரண்டு பாகங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. அந்தப் படங்களின் அடர்த்தியான திரை மொழிக்கு வலுசேர்த்ததில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசைக்கு பெரும் பங்கு உண்டு என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
தமிழகத்தில் எளிய மக்களின் பிரச்சினைகளுக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கும் அணுகுமுறை மூலமும் தன்னை தனித்துக் காட்டி வருபவர் ஜி.வி.பிரகாஷ். ஒருபக்கம் திரையிசைப் படைப்பில் வியப்பூட்டும் திறைமையும், மறுபக்கம் சமூக அக்கறையுடன் செயல்படும் தெளிவும் கொண்ட ஜி.வி.பிரகாஷ், திரைத் துறையில் உண்மையிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’தான். சரி, ‘இசையிலே முழு கவனம் செலுத்தலாமே… இவர் ஏன் கமர்ஷியல் படங்களில் நாயகனாக நடிக்க வேண்டும்?’ என்ற கேள்வி அவ்வபோது மக்களிடம் எழுவது உண்டு. இதற்குப் பின்னால் ஒரு ‘ஸ்வீட் ரிவெஞ்ச்’ கதை இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களும் நல்லெண்ணத்துடன் வளைந்து கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். ஆனால், சிலர் அவரது மென்மையான போக்கை ‘மிஸ் யூஸ்’ செய்தனர். இதனால் வருவாய் இழப்புக்கு ஆளானார் ஜி.வி.பிரகாஷ். இந்த விரக்தியில் ‘நானும் சினிமாவில் பணம் சம்பாதிக்கிறேன், பார்!’ என்று சவால் செய்து, ஹீரோவாக நடிக்கத் தொடங்கி, லாபம் ஈட்டும் நாயகன் ஆனார்.
நடிப்பில் கவனம் செலுத்தினாலும், நல்ல இசையை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வழங்கி வரும் ஜி.வி.பிரகாஷை நாமும் வாழ்த்துவோம்.