உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ, ஃபேன்டசி படங்களுக்கு எல்லா காலங்களிலும் மவுசு உண்டு. ஒரு சராசரி மனிதரால் செய்ய முடியாத காரியங்களை சூப்பர் ஹீரோ ஒருவர் செய்வதை திரையில் பார்ப்பது ஓர் அலாதி அனுபவம். அமெரிக்காவில் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே காமிக்ஸ் வடிவில் சூப்பர் ஹீரோக்கள் அறிமுகம் ஆகிவிட்டாலும், அவற்றை இன்று வரை திரைப்படங்கள் வழியாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது ஹாலிவுட்.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிசி, மார்வெல் காமிக்ஸ்கள் வழியாக சூப்பர் மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இந்தியா உட்பட உலக அளவிலும் பிரபலமாக இருந்தன. சூப்பர் ஹீரோ படங்கள் அதிகளவில் வர ஆரம்பித்த பிறகு இந்தியாவில் இவற்றுக்காக வரவேற்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, வோல்வரின், டெட்பூல் போன்ற காமிக்ஸில் அதிகம் பரிச்சயம் இல்லாத ஹீரோக்களும் இன்று இந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்தியாவிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சூப்பர் ஹீரோ காமிக்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த சூப்பர் ஹீரோக்கள் மட்டுமின்றி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சில கதாபாத்திரங்கள் பிரபலமாக இருந்தன. 80கள், 90களில் நாகராஜ், டோகா, சூப்பர் கமாண்டோ துருவா போன்ற சூப்பர் ஹீரோக்களும் சரி, 90களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சக்திமானும் சரி, அதன் பிறகு அவற்றை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
சக்திமான் கேரக்டரை வைத்து ஒரு முழு நீள படத்தை எடுக்கவிருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு சோனி நிறுவனம் அறிவித்தது. இதற்காக சில பெரிய நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அதன் பிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இந்தியில் ஒரு குறிப்பிடத்தக்க சூப்பர் ஹீரோ முயற்சி என்று சொன்னால் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘க்ரிஷ்’ படத்தைச் சொல்லலாம். அதற்கு ஒரு நியாயமான முன்கதையும் இருந்தது. ஆனால் ‘க்ரிஷ் 3’ படம் நல்ல வரவேற்பை பெற்றபோதிலும் கூட அதன்பிறகு அடுத்தடுத்த பாகங்கள் முயற்சிக்கப்படவில்லை. மேற்கூறிய இந்திய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கின்றன?
தென்னிந்திய திரைத் துறையை எடுத்துக் கொண்டால் தமிழில் ‘முகமூடி’, ‘கந்தசாமி’, ‘ஹீரோ’, ‘வீரன்’ போன்ற சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை பெரிய வரவேற்பை பெறவில்லை. இதில் ‘மாவீரன்’ படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்துக்கான நல்ல களம் இருந்தும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இப்படியான சூழலில்தான், மலையாள திரையுலகம் இந்த விஷயத்தில் முன்னோடியாக திகழ்கிறது. 2021-ஆம் ஆண்டு பேசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. கரோனா பரவலின் தாக்கத்தால் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியானதே இந்தப் படம் பெற்ற சர்வதேச கவனத்துக்கு காரணம்.
அதுவரை அமெரிக்காவை மட்டுமே காப்பாற்றிக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோக்களை பார்த்து வந்த ஆடியன்ஸுக்கு நம்ம ஊரில் ஒரு சூப்பர் ஹீரோ இருந்தால் எப்படி இருப்பான் என்று காட்டிய படம் ‘மின்னல் முரளி’. மின்னல் தாக்குதலால் சிறப்பு சக்திகளை பெறும் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு திரைக்கதையில் விளையாடியிருப்பார் பேசில் ஜோசப்.
இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம், அதில் இருந்த நேட்டிவிட்டி. கேரள படங்கள் என்றாலே நேட்டிவிட்டிதான் என்ற நிலையில், ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களத்திலும் கூட அதில் எந்த சமரசமும் செய்யாமல் இருந்தது சிறப்பு. அதன் பிறகு பேசில் ஜோசப் நடிகராக பிசியாகிவிட்டாலும் கூட இப்போதும் ரசிகர்கள் பலர் அவரது சமூக வலைதளங்களில் ‘மின்னல் முரளி’ அடுத்த பாகம் எப்போது என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
தற்போது அதே மலையாள திரையுலகில் இருந்து வெளியாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1’ என்ற சூப்பர் ஹீரோ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. கேரளாவில் தொன்றுதொட்டு சொல்லப்படும் தொன்மக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை நவீனப்படுத்தி ஒரு பெண் சூப்பர் ஹீரோவை உருவாக்கி, அதற்கேற்ற ஒரு நேர்த்தியாக திரைக்கதையுடன் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் டோமினிக் அருண்.
’மின்னல் முரளி’யைப் போலவே இந்தப் படத்திலும் பிரதான கதாபாத்திரத்துக்கு ஒரு வலுவான பின்னணி உண்டு. அதைப் போலவே இதிலும் ஒரு வலிமையான வில்லன். இது தவிர படம் முழுக்க நாட்டார் கதைகளில் உலவும் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து மார்வெல் பாணியில் கேமியோ செய்யவைத்தது அருமையான உத்தி.
‘டிராகுலா’ தொடங்கி ‘ட்விலைட்’, தற்போதைய ‘சின்னர்ஸ்’ வரை ஹாலிவுட்டில் கசக்கிப் பிழிந்த வேம்பயர் கதைகள் இந்தியாவுக்கு புதிது. அதை நமக்கு ஏற்றவகையில் ‘யட்சி’ ஆக மாற்றி எந்த வகையிலும் திகட்டாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஆக்ஷனுக்கும் வன்முறைக்கும் பல நூறு கோடிகளை கொட்டி பான் இந்தியா படங்களை தயாரிக்க ஒவ்வொரு மாநில சினிமாத் துறையும் முயன்று கொண்டிருக்கும் வேளையில் உண்மையிலேயே பிரம்மாண்ட பட்ஜெட் தேவைப்படும் ஜானர் படங்களை மிகக் குறைந்த செலவில் அநாயசமாக உருவாக்கி அசத்திக் கொண்டிருக்கின்றனர் சேட்டன்கள்.
தமிழ், தெலுங்கு போன்ற சினிமாத் துறைகளில் ஹீரோக்களுக்கே ரூ.200 கோடியை சம்பளமாக கொடுத்துவிட்டு மேக்கிங்கில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் சூழலில் வெறும் ரூ.30 கோடி ரூபாயில் உலகத் தரத்தில் ஒரு சூப்பர் ஹீரோ(யின்) படத்தை தந்திருக்கிறது மலையாள தேசம். அதிலும் இதற்கு முன்பு வெளியான ‘மின்னல் முரளி’யின் பட்ஜெட் வெறும் ரூ.18 கோடி மட்டுமே.
சாத்தன், சாத்தனின் 389 உடன்பிறப்புகள், மாடன் என படம் முழுக்க ஆங்காங்கே தூவப்பட்டிருந்த நாட்டார் வழக்கியல், படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரையிலான செட்டிங் அனைத்தும் ஒரு கிராஃபிக் நாவல் படித்ததைப் போன்றதொரு உணர்வை தருகின்றன. எந்தவித பின்னணியோ அழுத்தமோ இல்லாமல் வன்முறையை மட்டும் நம்பி ஜல்லியடிக்காமல் கேரள மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ‘லோகா’ மூலம் ஒரு தனி யுனிவர்ஸுக்கு தயாராகிறது மலையாள திரையுலகம்.