குடும்பப் படம் எடுப்பது தான் கடினம் என்று ‘தலைவன் தலைவி’ பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் பேசினார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 12-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
இந்தச் சந்திப்பில் பாண்டியராஜ் பேசும் போது, ”’தலைவன் தலைவி’ படத்தில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறோம். இன்று விவகாரத்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏன் என்ற கேள்வி தான் இந்தக் கதை. விவகாரத்து பெறுவதற்கு எண்ணம் இருந்தாலோ, நீதிமன்றத்துக்கு சென்றிருந்தாலோ இந்தப் படம் பார்த்தவுடன் விவகாரத்து செய்ய வேண்டுமா என்று யோசிப்பார்கள் என நம்புகிறேன்.
குடும்பப் படம் எடுத்தாலே சீரியலாக இருக்கிறது, க்ரிஞ்ச்சாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். உண்மையில் குடும்பப் படம் எடுப்பது தான் கடினம். கொஞ்சம் தவறவிட்டால் சீரியலாக மாறிவிடும் என்பது உண்மை தான். ’தலைவன் தலைவி’ படமும் கணவன் – மனைவி இடையேயான உறவை பேசுகிற படம் தான். கொஞ்சம் விட்டால் டிராமாவாக மாறிவிடும். அதனால் தான் இக்கதையை எழுத நேரம் எடுத்துக் கொண்டேன். இப்படத்தில் மக்கள் தொடர்புப்படுத்திக் கொள்ளக் கூடிய நிறைய விஷயங்கள் இருக்கிறது.
இந்த ஆண்டு ’குடும்பஸ்தன்’, ‘லப்பர் பந்து’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘மாமன்’ என குடும்பக் கதைகளை மக்கள் விரும்பி பார்க்க தொடங்கிவிட்டார்கள். என்னை சந்திக்கும் தயாரிப்பாளர்களும், என்னிடம் குடும்பக் கதைகள் தான் எதிர்பார்த்தார்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என யாருமே குடும்பக் கதைகளை தவிர்ப்பது கிடையாது. ’தலைவன் தலைவி’ வெற்றியடைந்துவிட்டால் அனைவருமே இதே மாதிரி கதை இருக்குமா என்று கேட்பார்கள். ஏனென்றால் ‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றியடைந்த பின்பு, அதே மாதிரி ஒரு படம் பண்ணலாம் என்று சிவகார்த்திகேயன் கேட்டார். அது தான் ‘நம்ம வீட்டு பிள்ளை’.
காதல் படம் எடுத்தால் 2 டிக்கெட், ஹாரர் படம் எடுத்தால் 4 டிக்கெட் வரை போகும். அதே வேளையில் குடும்பப் படம் எடுத்தால் 10 டிக்கெட், 20 டிக்கெட் என போய் கொண்டே இருக்கும். ஏனென்றால் படம் நன்றாக இருக்கிறது என்று வாட்ஸ்-அப் குரூப்பில் பரவ தொடங்கினால் பிய்த்துக் கொண்டே போகும். அது தான் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு நடந்தது. குடும்பப் படத்துக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் ‘தலைவன் தலைவி’. குடும்பப் படம் மட்டுமன்றி காதலிப்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கும். ஏனென்றால் முதல் பாதியில் நிறைய காதல் காட்சிகள் வைத்திருக்கிறோம். ஆகையால் அனைவருக்குமான படமாக இருக்கும்” என்று பேசினார் பாண்டிராஜ்.