’விஸ்வம்பரா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. தற்போது இதன் வெளியீட்டை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு மாற்றியுள்ளது படக்குழு. இதனை சிரஞ்சீவி வீடியோ பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வம்பரா’. இதன் வெளியீட்டு தாமதம் குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே கிராபிக்ஸ் காட்சிகள் என்பதாலேயே தாமதம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனை சரியாக செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும், இதனால் தான் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் சிரஞ்சீவி.
’விஸ்வம்பரா’ படத்தின் வெளியீட்டு குழப்பத்தால், அனில் ரவிப்புடி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் வெளியீடு அடுத்த ஆண்டு கோடை விடுமுறை என்று உறுதியாகிவிட்டதால், அனில் ரவிப்புடி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு, அனில் ரவிப்புடி படத்தின் தலைப்புடன் கூடிய டீஸர் வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிரஞ்சீவி – அனில் ரவிப்புடி படம் வெளியாகவுள்ளது.