‘நீர்க்குமிழி’ படம் மூலம் கே.பாலசந்தரை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் ஏ.கே.வேலன். எம்.ஜி.ஆர். நடித்த ‘மாட்டுக்கார வேலன்’, ‘அரசக்கட்டளை’ உள்பட பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதியவர், இந்த வேலன். இவர் இயக்கித் தயாரித்த முதல் படம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. இதில் கிடைத்த வருமானத்தை வைத்து சென்னையில் அருணாச்சலம் ஸ்டூடியோவை அமைத்தார். அவர் எழுதி, இயக்கி, தயாரித்த படங்களில் ஒன்று ‘காவேரியின் கணவன்’.
முத்துக்கிருஷ்ணன், வளையாபதி, சவுகார் ஜானகி, சூர்யகலா, சி.கே.சரஸ்வதி, தங்கவேலு, கரிக்கோல் ராஜ், அங்கமுத்து என பலர் நடித்தனர்.
இது காவேரி மற்றும் அவள் சகோதரன் ஆனந்தனின் காதல் கதைகளைக் கொண்ட படம். காவேரி சிறுமியாக இருக்கும்போது, அவள் தந்தை தனது நண்பன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். நண்பருக்கு ஏகாம்பரம் என்ற மகன். திருமணம் பற்றி ஏதும் அறியாத வயதிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து விடுகிறார்கள். ஏகாம்பரம் வளர்ந்து, வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்புகிறார். அப்போது காவேரி, ஆற்றில் விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் ஏகாம்பரம் வேறொரு பெண்ணை மணக்கிறார். பிறகு காவேரி உயிரோடு இருப்பதாகத் தகவல் வருகிறது.
வேறொரு ஊரில் வசிக்கும் காவிரியின் சகோதரர் ஆனந்தன், சகோதரி ஆற்றில் விழுந்ததைக் கேள்விப்பட்டதும் சோகமாகி நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு நாடகக் குழுவில் வசந்தா என்ற பெண்ணைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். அவருக்குள் பிரச்சினை வருகிறது. உயிரோடு இருக்கும் காவேரி, கணவனுடன் இணைந்தாரா? ஆனந்தன், வசந்தா பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பது கதை.
இந்தப் படத்தின் சிறப்பு கே.வி.மகாதேவன் இசையில் அமைந்த பாடல்கள். ‘சின்ன சின்ன நடை நடந்து…’, ‘பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா’, ‘அலைமோதுதே நெஞ்சம் அலைமோதுதே’, ‘மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே’ உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
இதில், தஞ்சை ராமையாதாஸ் எழுதி, எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குழந்தை போன்ற குரலில் வெளியான ‘மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே / பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. இப்போதும் இப்பாடல் பலருடைய பேவரைட் பட்டியலில் இருக்கிறது. 1959-ம் ஆண்டு இதே தேதியில் (செப்.27) வெளியானது இந்தப் படம்.