சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர்.
நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இதை, பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சக்ரி இயக்கியுள்ளார் இவர் ஏற்கெனவே ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் ரவி என்ற பெயரில் இயக்கியவர்.
படம் பற்றி அவர் கூறும்போது, “நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புப்படுத்தக் கூடிய கதையை கொண்ட படம் இது. பணத்தின் மீது ஏற்படுகிற ஆசை, ஒருவர் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது ஒன் லைன். இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் இருவருமே இயக்குநர்கள் என்பதால், நடிப்பைப் பெறுவது எளிதாக இருந்தது.
சில இடங்களில் அவர்களிடம் திருத்தம் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. அதற்குச் சரியான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள். சொன்னதும் ஏற்றுக்கொண்டு நடித்தார்கள். இருவருக்குமான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். கதை சென்னையிலும் சில காட்சிகள் வெளிநாட்டிலும் நடக்கிறது. இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ அண்ட் டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்நிறுவனம் இசை அமைத்துள்ளது.
இசை அமைப்பில் இந்த முறை, தமிழ் சினிமாவுக்கு புதிது. இதன் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளிக்குப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.