கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார் ரத்னகுமார்.
‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார். குறிப்பாக ‘லியோ’, ‘கூலி’, ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’ உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார் ரத்னகுமார்.
கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகனாக விது நடிக்கவுள்ளார். ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் விது என்பது குறிப்பிடத்தக்கது. விது உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக, லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் ‘பென்ஸ்’ படத்தினை ரத்னகுமார் இயக்குவதாக இருந்தது. ஆனால், அது கைகூடவில்லை. இதனால் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் மீண்டும் படம் இயக்கவுள்ளார். மேலும், ரத்னகுமார் இயக்குநராக அறிமுகமான ‘மேயாத மான்’ படத்தினை தயாரித்தது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தான் என்பது நினைவுகூரத்தக்கது.