நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், “நீண்ட ஆலோசனைக்குப் பின், தீபிகாவும் ‘கல்கி 2898 ஏடி’ குழுவும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்துள்ளோம். இதனால், இந்தப் படத்தின் 2-ம் பாகத்தில் அவர் இடம்பெறமாட்டார். ‘கல்கி 2898 ஏடி’ போன்ற படத்தில் நடிக்க அர்ப்பணிப்பும் சில விஷயங்களும் தேவைப்படுகின்றன. அவருடைய எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2-ம் பாகத்தில் தீபிகாவின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டு கவுரவ வேடம் போல மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, குறைவான வேலை நேரம், 25 சதவீத சம்பள உயர்வு கேட்டதாகவும் மற்றும் அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் விஷயத்திலும் தயாரிப்பு தப்புக்கும் தீபிகா படுகோனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்தும் தீபிகா படுகோன் திடீரென விலகியது குறிப்பிடத்தக்கது.