‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் வில்லனாக சிறு கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
இதனிடையே திடீரென்று ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இதனை கவனமாக பரிசீலித்த பின்பே, நாங்கள் பிரிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தை உருவாக்க நீண்ட பயணம் இருந்த போதிலும், எங்களால் அடுத்த பாகத்தில் இணைய முடியவில்லை.
‘கல்கி 2898 ஏடி’ போன்ற ஒரு படத்துக்கு அர்ப்பணிப்பையும் தாண்டி இன்னும் பல விஷயங்களுக்கு தகுதியானது. தீபிகாவின் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று வைஜெயந்தி மூவிஸ் தெரிவித்துள்ளது.
முதல் பாகத்தில் கதைப்படி தீபிகா படுகோன் கதாபாத்திரத்தை முன்வைத்தே கதை நகரும். 2-ம் பாகத்தில் அவர் இல்லாமல் எப்படி என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா – பிரபாஸ் இணையும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகினார் தீபிகா படுகோன். இது தொடர்பாக படக்குழுவினருக்கும், தீபிகாவுக்கும் இடையே பிரச்சினை உருவானது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோனின் பெயரைக் குறிப்பிடாமல் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடினார் சந்தீப் ரெட்டி வாங்கா.
தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படம் தொடர்பாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவினை மேற்கொளிட்டு சந்தீப் ரெட்டி வாங்கா சிரிக்கும் ஸ்மைலிகளை வெளியிட்டார். பின்பு அப்பதிவை நீக்கிவிட்டார். தீபிகா படுகோனை தயாரிப்பு நிறுவனம் நீக்கியிருப்பது இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.