கரூர் சம்பவத்தினால் ‘ஜனநாயகன்’ படத்தின் விளம்பரப்படுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் சிறிய டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரூர் துயரச் சம்பவத்தினால் தற்போது இப்பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தினை முன்வைத்து விஜய்யை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைதும் நடைபெற்று வருகிறது. இதனை முன்வைத்தே பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. தீவிர அரசியலுக்கு வரும் முன் விஜய் நடித்த கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.