சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசர் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் ‘கருப்பு’. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – டீசரின் தொடக்கத்தில், “கற்பூரம் காட்டி கண்ணுல ஒத்திக்குற சாந்தமான சாமி இல்ல.. மனசார வேண்டிக்கிட்டு மிளகா அர்ச்சா… உடனே நியாயம் குடுக்குற முரட்டு தனமான சாமி” என்ற வசனம் வருகிறது. இந்தக் காட்டமான வசனத்துடன் கூடிய டீசருக்கு சாய் அபயங்கர் பின்னணி இசை கூடுதல் பலமாக உள்ளது.
இப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் கருப்பசாமி போல சூர்யா வருவதாக டீசரில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்த டீசரில் சூர்யாவுக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்குமான மோதல்கள் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது அதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜியின் ஒரு முழு ஆக்ஷன் படமாக ‘கருப்பு’ படம் இருக்கும் என்று தெரிகிறது.