கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பிரபல மலையாள நடிகர் பிஜு குட்டன் காயமடைந்தார்.
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பிஜு குட்டன். இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காகக் கோயமுத்தூரிலிருந்து ஒரு காரில் கொச்சிக்கு பிஜு குட்டன் சென்று கொண்டிருந்தார்.
பாலக்காடு அருகிலுள்ள வடக்கமுறியில் நேற்று காலை 6 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். பிஜு குட்டன் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்காட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு கார் ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.