‘மாமன்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் மிகவும் நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படத்தின் கதையை சூரிதான் கொடுத்துள்ளார். இப்படம் தமிழகத்தில் ரூ.25 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்த வரவேற்பை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சூரி.
அந்தப் பதிவில் சூரி, “உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்புக் கொடுப்பதில்தான் ஆரம்பமாகிறது. அந்த நம்பிக்கையோடு ‘மாமன்’ கதையை நான் தொடங்கினேன். ‘மாமன்’ என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான பயணம்.
இந்த உணர்வுகளை என் இயக்குநர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்போடும் எடுத்துக் கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் பயணத்தில், ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை மனதார உணர்ந்து, உயிரோட்டமுடன் அரங்கேற்றினார்கள்.
அதேபோல் ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு, ஒலி, கலைத்துறை, உடை வடிவமைப்பு, நடனம், சண்டை இயக்கம், எழுத்து, தயாரிப்பு நிர்வாகம், வாகன வசதி, ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவும் தங்களின் முழு அர்ப்பணிப்போடும், நம்பிக்கையோடும் பணியாற்றினர். அவர்களது அயராத உழைப்பும், நேர்த்தியும் தான் ‘மாமன்’ இன்று உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கிய காரணம்.
இன்று ‘மாமன்’ திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஒலிக்கிறது திரையில் மட்டும் அல்ல, நீங்கள் அளித்த அன்பிலும், பாராட்டிலும், உற்சாக புன்னகைகளிலும்… ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளத்திலும் அது வாழ்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் தான் எனக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும்.
‘மாமன்’ படத்தை உங்கள் குடும்பத்தோடு இணைந்து ரசித்து, உள்ளத்தோடு ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும், என் வாழ்த்துகளும்” என்று தெரிவித்துள்ளார் சூரி.