‘ஓஜி’ பட வெளியீட்டுக்காக ‘மிராய்’ படக்குழுவினர் திரைகளை விட்டுத் தந்த செய்த திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வியாழக்கிழமை (செப்.25) வெளியாகும் படம் ‘ஓஜி’. மாபெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியாக இருக்கிறது. இன்று இரவு முதலே ப்ரீமியர் காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது ஆந்திர அரசு. மேலும், 10 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள், டிக்கெட் விலையில் ஏற்றம் என பல்வேறு சலுகைகளையும் வழங்கியிருக்கிறது.
இதனிடையே, சமீபத்தில் வெளியான ‘மிராய்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்போதும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ‘ஓஜி’ வெளியீட்டை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் தங்களுடைய படம் திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளை ‘ஓஜி’ படத்துக்காக வழங்கியிருக்கிறது. 26-ம் தேதி முதலில் புதிதாக பாடலொன்றை சேர்த்து மீண்டும் ‘மிராய்’ திரையிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
‘மிராய்’ படக் குழுவினரின் இந்தச் செயல் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஏனென்றால், நல்ல வசூல் செய்து வரும் படத்தினை ஒருநாள் மட்டும் திரையரங்குகளை விட்டுக் கொடுப்பது என்பது வசூலில் சில கோடிகளை இழப்பதாகும். இந்த முடிவுக்கு இணையவாசிகளும், பவன் கல்யாண் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.